இலங்கையில் கொலைகள் அதிகரிப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை: சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழக்கிறது!

z p00 Namal Rajapaksa

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைக் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு நழுவுவதாகத் தோன்றுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘X’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நாமல் அதில், தேசிய மக்கள் சக்தி (NPP) அமைச்சர்கள் தினசரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நின்றுவிட்டதாகக் கூறினாலும், “சில குழுக்களுக்கு ஏற்றவாறு கொலைகள் தொடர்ந்து மீண்டும் நிகழ்கின்றன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவங்களை அரசாங்கம் அவசரமாக திட்டமிட்ட குற்றக் குழுக்களுடனும், போதைப்பொருள் நடவடிக்கைகளுடனும் தொடர்புபடுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்தக் கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் மிகக் குறைவு. மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பதும், சட்டம் ஒழுங்கு மீது அரசாங்கத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததும் கவலை அளிக்கிறது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் உண்மையாகவே கட்டமைப்பு மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கு உறுதியுடன் இருந்தால், அதன் முதல் முன்னுரிமை குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் கொலைகளால், இப்போது எவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். எனவே, பொதுச் சேவையில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version