வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

20230508 112721

வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

யாழ்ப்பாணம் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதல் நிகழ்வே நாளை (09) செவ்வாய்க்கிழமை காலை வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக மருதனார்மடம் சந்தியிலும் காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

புதன்கிழமை(10) காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாகவும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்திலும்

வியாழக்கிழமை (11) மன்னாரிலும் வவுனியாவிலும் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை (12) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிவன் கோவில், அன்பொளிபுரம், பத்திரகாளி அம்மன் கோவில்,மூதூர் பகுதியிலும் இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோவில் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே 15 முதல் யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளை இலக்கு வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனை தெரிவித்தனர்.

#SriLAnkaNews

Exit mobile version