30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன.
இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவு மண்ணில் பலி கொடுத்த தமது உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் ஒன்று திரண்டு தமிழர் தேசம் அஞ்சலி செலுத்தி வருகின்றது.
தீச் சுடரேற்றி, மலர் தூவி தமது கண்ணீரால் உயிரிழந்த உறவுகளை நினைவேந்துகிறது தமிழர் தாயகம்.
துயர வரலாற்றை சுமந்த சாட்சியாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி ஊர்திப் பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறைக் கூண்டொன்றுடன் பயணிக்கும் கைதிகள் போல வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் இந்த பவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை இந்த நாளில் வலியுறுத்தும் நோக்கில் இந்த பவனி கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.