யாழ் ஆலடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் நிகழ்வே இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலடி பகுதியில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் வர்த்தக நிலையங்களிலும் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களும் மாணவர்களால் வீதியால் பயணித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது
தொடர்ச்சியாக இன்றையதினம் மருதனார்மடம் சந்தியிலும் காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.
#srilankaNews