இதுவரை போராடியவர்களில் 120 பேருக்கு மேல் இறப்பு! நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா?” என்ற ஏக்கத்தோடு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில் தொடரும் தொடர் போராட்டத்தின் 1906 நாளான இன்று இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது .
போராட்டத்தில் ஈடுபட்ட 300 இற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “இதுவரை போராடியவர்களில் 120 பேருக்கு மேல் இறப்பு; நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா?, OMP ஒரு கண்துடைப்பு நாடகம், உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் எதிர்பாக்கிறோம், இன அழிப்புக்கான நீதி அவசியம், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?, தண்டனைக்கு விலக்களிக்கும் கலாசாரம் இலங்கையில் தொடர்கின்றது, எமக்கு வேண்டும் சர்வதேச நீதி விசாரணை உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews