கிழக்கு மாகாணத்தில் பாரிய அளவில் நிலங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 2,700 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவுகள் வருமாறு:
மண்முனை தென் எருவில் பற்று: 19 இடங்கள்.
போரதீவுப் பற்று: 34 இடங்கள்.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் எல்லை அடையாளப் பதாகைகளை நிறுவ முயன்றபோது, அப்பகுதி மக்கள் அதற்குத் தடையாக இருந்துள்ளனர்.
பதாகைகள் நிறுவப்பட்டால் அந்த இடங்கள் மக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்ற அச்சத்தில் மக்கள் போராடியுள்ளனர்.
இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட சுமார் 55 பொதுமக்கள் மீது தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
மக்களின் பூர்வீக நிலங்கள் இவ்வாறு திட்டமிட்ட முறையில் அடையாளப்படுத்தப்படுவது பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

