இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளால் வட பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 12ஆம் திகதி கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
“தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் இல்லாமல் கடற்பரப்பைத் தனது பூரண கட்டுப்பாட்டில் நேர்த்தியாக வைத்திருந்தார்.”
“விடுதலைப் புலிகளின் காலத்தில் வட பகுதி கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தினைப் பூர்த்தி செய்யக்கூடியவகையில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.”
தற்போது இந்திய இழுவைப் படகுகளின் அட்டகாசமான செயற்பாடுகள் தொடர்வதால், வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்ட மீனவக் குடும்பங்களும் அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்வதில் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்திய இழுவைப்படகுகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் செயற்பாடுகளும் நிறுத்தப்படுமெனில் எமது கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் எதனையும் வழங்கத் தேவையில்லை. எமது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தினைத் தாமே மேம்படுத்திக்கொள்வார்கள்.”
இந்த அத்துமீறலுக்கு எதிராகத் தான் நாடாளுமன்றில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாகவும் ரவிகரன் தெரிவித்தார். ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் மற்றும் கேள்வி நேரங்களில் அமைச்சரிடம் வினா எழுப்புவது எனப் பல வழிகளிலும் இவர் குரல் கொடுத்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்த சந்தர்ப்பங்களிலும் இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அதற்குப் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துமீறலை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியதனாலேயே கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது. எனவே, அரசாங்கம் மெத்தனப் போக்குடன் செயற்படாமல் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.