புத்தளம் , ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மாத்திரம் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை அப்பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தேடியும் அன்றைய தினம் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன குடும்பஸ்தரை தேடுவதற்காக கடற்படையினரின் உதவியும் பெறப்பட்டது.
அதன்பின்னர் கடற்படையினர் குறித்த குளப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது, காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNEws

