துறைமுக நெரிசலைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: 8,000 கொள்கலன்களை விரைவாக விடுவிக்கத் திட்டம்!

1736835939 Customs L

நடப்பாண்டின் இறுதிப் பகுதியில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கொள்கலன்களின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், துறைமுகச் செயல்பாடுகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. தற்போது அனுமதி நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கும் சுமார் 8,000 கொள்கலன்களை விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்க, குறைந்த ஆபத்துள்ள (Low-risk) கொள்கலன்களைப் புளுமெண்டலில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபையின் பிரிவுக்கு அனுப்பி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுங்கத் துறையின் முழுமையான மேற்பார்வையின் கீழ், கொள்கலன் அனுமதிச் சோதனைகளை துரிதப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைமுகப் பணிகளின் முன்னேற்றத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தங்குதடையின்றி வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர் அநுர கருணாதிலக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கான அடுத்தகட்ட மதிப்பாய்வுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version