பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள் தொடர்பில் 19 வருடங்களாக 17 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என்பதுடன் கொழும்பு மாநகர சபையில் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் மூன்று கோடி ரூபா கட்டணம் தற்போது வரை செலுத்தப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வுத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மற்றும் பிற கடனாளிகளின் 118 கோடி ரூபாய் கடன் நிலுவை தீர்க்கப்படாமல் இருப்பதாக குறித்த அறிக்கை கூறுகிறது.
மேலும் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கடன் மற்றும் முன்பணத்தை வசூலிக்காமல் 90 வீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ள விடயமும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதே போன்று நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவருக்கு திறைசேரியின் அனுமதியின்றி மூன்று வாகனங்களும், மற்றும் முன்னாள் துணைத் தலைவருக்கு இரண்டு வாகனங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக திறைசேரியின் அனுமதியின்றி மாதாந்தம் 150 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக சபையின் முன்னாள் தலைவர் மற்றும் உப தலைவருக்கு 60,000 ரூபா எரிபொருள் முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.