“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ஆம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உப குழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கின்றேன். அப்போது இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நின்று விடும்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம், நேற்றிரவு இருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின்போது, கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கூறியுள்ளதாவது:-
“நேற்றிரவு தொலைபேசியில். சபாநாயகர் மஹிந்த யாப்பாவிடம் பேசி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவைத் தொடர்புகொண்டு, “20ஆம் திருத்தத்தை அகற்றிவிட்டு, 19ஆம் திருத்தத்தைக் கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். அமைச்சரவையிலும் அனுமதி பெற்றதாகவும் சொன்னீர்கள். ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் நாம் அரசமைப்பு திருத்த வரைபை வழங்கியுள்ளோம். அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முழுமையாக அகற்றுவது பற்றி கூறப்பட்டுள்ளது. எனினும், அரசின் வரைபுக்கே முதலிடம் கிடைக்கும். 20ஆம் திருத்தத்தை அகற்றும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் ஆதரவளிப்போம். முதற்கட்டமாக, 20ஐ அகற்றிவிட்டு, 19ஐக் கொண்டு வருவதையும் நாம் ஆதரிப்போம். ஆகவே, நீங்கள் எப்போது உங்கள் சட்ட வரைபை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றீர்கள்? இது பற்றி சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பாவிடம் பேசினேன். உங்கள் சட்ட வரைபு எப்போது சபைக்கு வரும் என்பது பற்றி, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்” என்று கேட்டேன்.
அதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, “இன்று நாட்டில் நிலவுவது பொருளாதாரப் பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். அரசமைப்பு தீர்வு என்பது பெரிய விடயமல்ல. அதனால் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ஆம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உப குழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்படத் தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன்” என்று கூறினார்.
“அரசமைப்பு திருத்தம் மூலம் நாட்டில் உடனடியாக இறுதித் தீர்வு வராது என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாட்டில் ஸ்திரத்தன்மை வருமே. அது தீர்வைக் கொண்டு வரும். இன்று மக்கள் நாடு முழுக்கப் போராடுகின்றார்கள்; அவதிப்படுகின்றார்கள். இது உங்களுக்குப் பிரச்சினை இல்லையா?” எனத் திருப்பிக் கேட்டேன்.
“இல்லை, கவலை வேண்டாம் தம்பி..! மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அதற்குத்தான் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றேன். அப்புறம் பாருங்கள், இந்தப் போராட்டங்கள் எல்லாமே முடிவுக்கு வந்து விடும்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறி முடித்தார்.
20ஆம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லி இருந்தாலும், இதற்கு அவர் முன்னுரிமை அளிக்கவில்லை என இப்போது தெரிகின்றது. நாட்டில் மக்கள் போராடுவது, உணவு, மருந்து, மின்சாரம், பெற்ரோல், எரிவாயு, உரம் போன்ற பொருளாதாரத் தேவைகளுக்காத்தான் என அவர் உறுதியாக நம்புகின்றார். ஆகவே, அவற்றுக்குத் தீர்வு கண்டால் இந்தப் போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என அவர் நம்புகின்றார். இதற்காக அவருக்கு நட்பு நாடுகள் உதவும் எனவும் அவர் நம்புகின்றார்.
ராஜபக்ச குடும்பத்தார் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், வீணடிப்பு, தவறான நிதிக்கொள்கை போன்ற விடயங்கள் பற்றி அவர் எதுவும் கூறாவிட்டாலும்கூட, இவை பற்றிய போராட்டங்களையும் கூட அவர் முக்கியமாகக் கருதவில்லை எனத் தெரிகின்றது.
இது பற்றி நேற்றிரவு ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் பேசினேன். இன்று ஏனைய எதிரணிக் கட்சி தலைவர்களிடமும் பேசவுள்ளேன். அனைத்து எதிரணி கட்சிகளும் தங்கள் செயற்பாடுகளை கூட்டிணைக்க வேண்டும் என விரும்புகின்றேன்” – என்றார் மனோ கணேசன்.
#SriLankaNews