சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில், கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வாழும் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் விசேட சவால்களை எதிர்கொள்வது தெளிவாகத் தெரிகிறது என்றும், இதில் பாதுகாப்பான காணி மற்றும் வீடுகள் முன்னுரிமை வகிக்கின்றன என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஊடகச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
அரசின் நிவாரண மற்றும் புனரமைத்தல் செயல்முறைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.
இந்த நிவாரண மற்றும் நிரந்தரத் தீர்வு முன்னெடுப்புகளில், பெருந்தோட்ட மக்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கும், அரசுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும், மலையக அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் விசேட சவால்கள் மற்றும் அதன் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நேரில் சந்தித்துக் கலந்துரையாடவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.