மன்னார் நொச்சிக்குளத்தில் இரு சகோதரர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ளதாகவும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
படுகொலை சம்பவத்துடன் நொச்சிகுளத்தைச் சேர்ந்த 16 பேர் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இதுதொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் படுகொலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் பங்கேற்றுள்ளமை குறித்து பொலிஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அம்மூவரும் கொலைகளை மேற்கொள்வதற்காகவே வேறு மாவட்டத்திலிருந்து நொச்சிக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு இருக்கலாம், என விசாரணையில் தெரிய வருவதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நொச்சிக்குளம் படுகொலையுடன் சம்மந்தப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது அக்கிராமத்தில் இருந்து தலைமறைவாகி, உறவினர்களின் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் மறைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை 11 மணியளவில் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும், உறவினர்களும் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிலங்குளத்தில் அண்மையில் நடந்த மாட்டு வண்டிச்சாவரியே கொலைக்கான காரணமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிலங்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலவும் பகைமையே காரணம் எனவும் நொச்சிக்குளம் அயல் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் படுகொலை சம்பவம் இடம்பெற்ற மன்னார் நொச்சிக்குள கிராமத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews