மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்தார்.
ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அழைக்க வேண்டாம் என்றும் நீதியரசர், கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு சமமான கவனமற்ற செயலை செய்து பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தியத்தியமைக்கு, தாக்குதல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏற்கவியலாத சாட்சியங்கள் மற்றும் செவிவழிச் சாட்சியங்களை கருத்திற்கொண்டு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும் தனது விருப்புரிமை அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த கோட்டை நீதவான் தவறிவிட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews