அடுத்தகட்ட நகர்வு என்ன? – மைத்திரியுடன் சஜித் நேரில் பேச்சு

maithri sajith

அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றிரவு முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ளன. எனினும், பதவி விலகுவதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் சுமூகதீர்வை எட்டும் நோக்கிலேயே மேற்படி அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் , விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும், இ.தொ.காவினரும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அவசர அரசமைப்பு திருத்தம் அவசியமென்றும், அதனை மேற்கொண்ட பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி ஆராயலாம் என சந்திப்பின்போது சஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கான நகர்வுகள் சம்பந்தமாகவும் ஐக்கிய மக்கள் சக்தியால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுமானால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வக்கட்சி இடைக்கால அரசு பற்றி பரீசலிக்கலாம் என சஜித் தரப்பில் இருந்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

எனினும், இவை சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்திய பிறகு, மீண்டும் சந்திப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version