மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப மஹிந்த முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

WhatsApp Image 2022 04 13 at 12.38.25 PM

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார்.”

– இவ்வாறு ஜே.வி.பி யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தை முதலில் பொருட்படுத்தாது இருந்த அரசு, பின்னர் அச்ச சூழலை உருவாக்கி அந்தப் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அது சாத்தியமாகாத பட்சத்தில் அடிப்படைவாத பிரச்சினை ஒன்றைத் தோற்று வைப்பதன் ஊடாக அந்தப் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்து விடலாம் என்று எண்ணி இருந்தது.

இவ்வாறான முயற்சிகள் தோல்வி அடைந்ததன் பின்னணியிலேயே தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றார். உண்மையில் இது போராட்டத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சியாகவே காணப்படுகின்றது.

நாட்டு மக்கள் இன்று கோரி நிற்பதானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசு பதவி விலகிச் செல்ல வேண்டும் என்பது மாத்திரமேயாகும்.

போராட்டத்தின் தொனிப்பொருளை உணர்ந்துகொள்ளாது பேச்சுக்கு தயார் என்பது போராட்டத்தைத் திசை திருப்புவதாகவே அமையும்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version