கஜேந்திரகுமார்
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? – கஜேந்திரகுமார் கேள்வி

Share

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருவது சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்புத் (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“இங்கு நாடு என நீங்கள் கருதுவது, ஒரு இனத்தை மட்டும்தான் குறிக்கின்றதா? அல்லது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் குறிக்கின்றதா?

அனைத்து இன குடிமக்களையும் உள்ளீர்த்து அவர்களுக்குமான பாதுகாப்பு எனக் கருதினால், அது ஒருபோதும் பெரும்பான்மைவாத கருத்தியலில் இருந்து உருவாக முடியாது.

உதாரணத்துக்கு இந்த அவையில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றை கேட்கின்றார்கள் என்பதற்காக அது முழு நாட்டுக்கும் உரித்தானது எனக் கருதவே முடியாது. துரதிர்ஷடவசமாக இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சியினரும் அதே எண்ணப்பாங்கிலேயே கருத்துரைத்திருக்கின்றார்கள்.

இங்கு இந்த நாடு எனக் கூறும்போது, இங்கு பல்லின அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரை இந்த நாடு ஆகக்குறைந்தது இரு தேசங்களைக் கொண்ட பல்தேச நாடாகும். எனவே, ஒரு நாட்டின் கருத்து என வரும்போது, ஒவ்வொரு இனத்தினரினதும் எண்ணங்களும் எதிர்ப்பர்ப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அந்தப் போராட்டம் ஏன் நடந்தது எனப் பாருங்கள்.

இந்த அரசு, தொடர்ச்சியாக இரு இனக்குழுமத்தை மட்டும் கருத்தில்கொண்டு மற்றைய சமூகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து ஒதுக்கி, ஒடுக்கியதாலேயே இங்கு போராட்டம் உருவானது.

இந்த நாட்டை நாம் எப்படி உருவாக்கிப் பார்க்க விரும்புகின்றோம் என்பதை வடக்கு, கிழக்கின் மக்கள், ஜனநாயக ஆணையாக தொடர்ச்சியாகவும் மிகத் தெளிவாகவும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

அவை ஆயுதத்துக்கோ, பிரிவினைக்கோ ஆன கோரிக்கைகளாக இருக்கவில்லை. மாறாக, பிரிவினைக்கும் ஆயுதத்துக்கும் எதிரான ஆணைகளாகவே முன்பு இருந்திருந்தது.

இந்த அவைக்கு வந்திருந்த தமிழ்ப் பிரதிநிதிகள், வன்முறையையும், பிரிவினையையும் நிராகரித்தே குரல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் கேட்டதெல்லாம், ‘எமது விருப்புகளையும் செவிமடுங்கள். எம்மையும் இந்த நாட்டின் சம பிரஜைகளாக மதித்து, எம்மையும் உள்வாங்குங்கள்’ என்பதே ஆகும். ஆனால், அங்குதான் நீங்கள் தவறிழைத்தீர்கள். அன்று மட்டும் அல்ல, இன்று வரைக்கும் அதே தவறையே தொடர்ந்தும் இழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த நாடு பல தேசங்கள் உடைய நாடு எனவும், இங்கு எமக்கு சமஷ்டி முறையான ஆட்சியே தேவை எனவும் மிகத் தெளிவானதும் மிக உறுதியானதுமான ஜனநாயக ஆணையை மீளவும் மீளவும் எமது மக்கள் அளித்து வருகின்றனர்.

உண்மையில் இந்த அரசுகள் மக்களிடம் பெற்ற ஆணையை விட எமது மக்கள் அளித்த ஆணை ஜனநாயக ரீதியில் வலுவானது. அதை மீளவும் மீளவும் நீங்கள் கருத்திலெடுக்காது நிராகரிக்கின்றபோது, எமது பிரதிநிதிகள் இங்கு வந்து அந்த ஆணையைப் பற்றிப் பேசுவது முட்டுச்சுவரில் தலையை மோதுவதாகவே இருக்கின்றபோது எம்மை ஒதுக்கி நடப்பதையே தொடர்ந்தும், உங்கள் செல்நெறியாகக் கொண்டிருக்கின்றபோது எமது மக்கள் வேறு என்ன செய்ய முடியும்?

எமது தாய் நிலத்தில் இருக்கும் மக்கள் தொடர்ச்சியாக உரிமை மறுக்கப்படுகின்றபோது, அவர்களது தாய் நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றபோது, அவர்களது சமய வழிபாட்டிடங்கள் அபகரிக்கப்படுகின்றபோது, காலம் காலமாக உழுது பயிரிட்ட நிலத்தில் இருந்து போரினால் வெளியேறி இப்போது மீள வரும்போது, அவை காட்டு நிலம் எனவும், அதில் பயிரிட முடியாது எனவும் மறுதலித்து, அதே நேரம் வேறு பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஏனைய இனத்தவருக்கு நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி உழுது பயிரிட அனுமதிக்கும்போது அந்த மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்? ஆனால் இதுதான் இன்றும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Image 2025 08 41e4a2510e8ad510f382097329a712cd 16x9 1
செய்திகள்இலங்கை

இலங்கை கண் தானம் உலக சாதனை: 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் உறுதியளிப்பு!

இலங்கையின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2.28 மில்லியனுக்கும் அதிகமான...

articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...