குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

images 9

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கானது அதே நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து நீதவான் கவனம் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் நவம்பர் 17ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில் நீதிமன்றுக்கு வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தை எடுப்பதற்காக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக வழக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன் மற்றும் முபாறக் மு.அஸ்ஸாம் உட்படப் பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Exit mobile version