உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்-அலி சப்ரி வலியுறுத்து!

download 4 1 13

உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்-அலி சப்ரி வலியுறுத்து!

கீழ்த்தரமான உள்ளக அரசியல் ஆதாயங்களுக்காக அறிக்கைகளை
வெளியிட முன்னர் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
-பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப செயற்படும்
உலகத்தலைவர்களிடம் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தல்
பிரிவினைவாதிகள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அனுதாபிகள் மற்றும் மேற்குல நிதிசேகரிப்பாளர்களுக்கு ஏற்றவாறு செயற்படும் உலகத்தலைவர்கள் கீழ்த்தரமான உள்ளக அரசியல் ஆதாயங்களுக்காக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பதாக இலங்கையிலுள்ள தமது தூதரகங்கள் ஊடாக உண்மையான வரலாறு குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று பொருள்படக்கூடியவகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது.
குறிப்பாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்துத் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் ‘இனப்படுகொலை’ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களைத் துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் அலி சப்ரி, ‘பிரிவினைவாதிகள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அனுதாபிகள் மற்றும் மேற்குல நிதிசேகரிப்பாளர்களுக்கு ஏற்றவாறு செயற்படும் உலகத்தலைவர்கள் கீழ்த்தரமான உள்ளக அரசியல் ஆதாயங்களுக்காக அறிக்கைகளை வெளியிட்டு, எமது மற்றுமொரு சந்ததி இளைஞர்களைத் தவறான முறையில் வழிநடத்துவதற்கு முன்பதாக இலங்கையிலுள்ள தமது தூதரகங்கள் ஊடாக உண்மையான வரலாறு குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு நேற்று முன்தினத்துடன் (21) 32 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், இலங்கை அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டமையையும் நினைவுகூர்ந்திருக்கின்றார்.
’32 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும், அவர்களது சர்வதேச நிதிவழங்குனர்களும், அரசியல் ஆதரவாளர்களும், புலனாய்வு வலையமைப்பும் கூட்டிணைந்து உலகின் பரந்துபட்ட ஜனநாயக நாட்டின் பிரதமரைப் படுகொலைசெய்தனர். இது இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்வதற்கு வழிவகுத்தது. 14 வருடங்களுக்கு முன்னர் மிகமோசமான பயங்கரவாத இயக்கத்தை இலங்கை தோற்கடித்ததுடன் நாட்டில் மீண்டும் சமாதானத்தை நிலைநாட்டியது’ என்று அமைச்சர் அலி சப்ரி பதிவிட்டுள்ளார்.
எதுஎவ்வாறிருப்பினும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்ந்ததாகவும் 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ கொல்லப்பட்டதுடன் 1990 இல் வடக்கிலிருந்து முஸ்லிம்களும் ஏனைய இன சிறுபான்மையினரும் விரட்டப்பட்டதாhகவும் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற முக்கிய தமிழ் தலைவர்களையும் விடுதலைப்புலிகள் இயக்கம் விட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கை அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட மேமாதம் 19 ஆம் திகதி முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#srilankaNews
Exit mobile version