யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.
பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம் என்றும் சிங்கள-தமிழ் புத்தாண்டு காலப்பகுதியாகும் போது அவர்களுக்கு 20 கிலோ அரிசி கிடைத்திருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி பன்னம்கட்டி கிராம வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பெருந்தொகையான பிரதேச மக்கள் ஜனாதிபதியைக் காணச் சுற்றிலும் கூடியிருந்ததோடு அவர்களின் தகவல்களைக் கேட்டறியவும் ஜனாதிபதி மறக்கவில்லை. அங்கிருந்த சிறுபிள்ளைகள் மத்தியில் சென்று அவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார்.
#SriLankaNews