tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக சாடிய நீதி அமைச்சர்

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தூற்றியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிங்களவர்கள் படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் பரஸ்பரம் கேள்விக்கணைகளைத் தொடுத்து காரசாரமாகத் தர்க்கம் செய்த நிலையில் கூட்டமைப்பினரைத் தூற்றினார் நீதி அமைச்சர்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நீதிமன்றம், நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் உள்ளிட்ட நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஐந்து சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி., நீதி அமைச்சரால் நேற்றுமுன்தினம் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் கடுமையாக அதனை விமர்சித்தார்.

சிறீதரனின் உரை முடிந்தவுடன் எழுந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் நாட்டில் படுகொலைகள் இடம்பெறுகின்றன என்று கூறுகின்றீர்கள். உலகில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாத நாட்டைக் குறிப்பிடுங்கள் பார்க்கலாம் என்றார்.

இதற்குப் பதிலளித்த சிறீதரன், சகல நாடுகளிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளது. ஆனால், இலங்கையில் மட்டும்தான் இந்தச் சட்டமூலத்தின் ஊடாக தமிழ் இனம் கொடுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் சொந்த மக்களையும், ஏனைய இனத்தையும் அழிப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

இதனால் சீற்றமடைந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்ததால்தானா பிரபாகரன் துரையப்பாவைப் படுகொலை செய்தார்.

தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைவரான லக்ஷ்மன் கதிர்காமரையும் அவர் படுகொலை செய்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வன் ஆகியோரைப் படுகொலை செய்தது யார்? தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது சரியானதா? பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாத்திரம்தான் நீங்கள் எதிர்க்கின்றீர்கள் முன்னாள் எம்.பி.ஆனந்த சங்கரி ஒருமுறை எனது வீட்டுக்கு என்னைத் தேடி முச்சக்கரவண்டியில் வந்தார்.

வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று கூறினார். பின்னர் நான் அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் அழைத்துச் சென்று அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தினேன். ஆனால், அவரது மகன் ஹரி ஆனந்தசங்கரி கனடாவில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கூறுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்த காரணத்தால்தான் நீங்களும் தப்பியுள்ளீர்கள். தேசிய பாதுகாப்பை எக்காரணிகளுக்காகவும் பலவீனப்படுத்த முடியாது. இங்கு சிங்கள அரசு, தமிழ் அரசு என்பதொன்று கிடையாது. ஸ்ரீலங்கா அரசே நடைமுறையில் உள்ளது. ஆகவே, முட்டாள்தனமான கருத்துக்களைக் கூற வேண்டாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விமோசனம் கிடையாது. நீங்களே தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என்றார்.

இதன்போது எழுந்து சிறீதரன், முட்டாள்தனம் என்று அமைச்சர் தன்னைத்தானே முட்டாள் எனக் கூறுவதனை வரவேற்கின்றேன். பிரபாகரன் இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலிமுகத்திடலில் தந்தை செல்வா ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டபோது யார் அவரைத் தாக்கிக் கடலில் தூக்கிப் போட்டது? திருகோணமலை – கந்தளாய் பகுதியில் சிங்களப் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க 154 விவசாயிகளைப் படுகொலை செய்தது யார்? அப்போது தமிழர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவில்லை.

தமிழர் பகுதியில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள்? எம்மை முட்டாள் என்று குறிப்பிடும் நீதி அமைச்சரே முட்டாள். இந்த நாட்டில் உங்களின் இனவாதத்தால்தான் ஆயுதம் எம் மீது திணிக்கப்பட்டது. தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

இதனையடுத்து மீண்டும் எழுந்த நீதி அமைச்சர், சிறீதரன் எம்.பி. 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூறினார். அப்போது நான் பிறக்கவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார். அக்காலப்பகுதியில் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்களத் தாய்மார்கள் படுகொலை தென்பகுதியில் எத்தனை குண்டு வெடிப்புக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் நீங்கள். தலதா மாளிகையைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இப்படி உங்களின் பல படுகொலைகளை எங்களினாலும் பட்டியலிட முடியும்.

இந்துத் தலைவர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் பிரபாகரன் நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார். இராணுவத்தினர் எவரையும் படுகொலை செய்யவில்லை. திராவிட தமிழ்க் கட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் ஆரம்ப காலத்தில் வேறு நோக்கத்துடன் அரசியல் கட்சிகளை ஆரம்பித்தார்கள். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் இணக்கமாக வாழ்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை. அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டுள்ளார்கள் என்றார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...