இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் தீட்டப்படும் சதி!
நீதித்துறையை சிதைத்து அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு சில அரசசார்பற்ற அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதாக, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையொன்றை நீதிமன்றம் சவாலுக்கு உட்படுத்த முடியாதென்ற சபாநாயகரின் அறிவிப்பு தொடர்பாக நேற்று சபையில் நடைபெற்ற காரசாரமான வாத விவாதங்களுக்கு பின்னர் அது தொடர்பாக கருத்துகளை முன்வைத்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் செயற்பட்டுள்ள விதம், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக பலரும் சபையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து அதை விலக்கிக்கொண்டமை, சபாநாயகர் வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு அல்லவென்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
அவ்வாறு நீதிமன்றத்தால் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை வைத்து இதனை வேறு கோணத்தில் கொண்டு செல்ல சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
நாடாளுமன்றம் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றதென்ற போர்வையில் இதனை முன்னெடுக்கப் பார்க்கின்றனர். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அரசசார்பற்ற அமைப்புகள் சில வௌிநாடுகளிலிருந்து கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருகின்றன எனும் கூற்றும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஒரு சமயம் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களையும் நிராகரிக்கும் நிலை காணப்பட்டது. எனினும், அந்த 225 பேரில் சிலரை ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களில் நிறைவேற்றுத்துறையை சிதைப்பதற்கும் இவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்.
நிறைவேற்றுத்துறை மீது நம்பிக்கை இல்லையெனக் காட்டி அரசாங்கத்தை வீழ்த்தவும் நடவடிக்கை எடுத்தார்கள்.
மீண்டும் இப்போதும் நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறையை சீர்குலைத்து அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment