கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பரராஜசிங்கம் சுஜீவனை கொழும்பு
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நாளை (17) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பானை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இச்செயற்பாட்டை கண்டித்து கிளிநொச்சி ஊடக அமையம் கண்டன அறிக்கை வெளியீட்டுள்ளது.
கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை,
அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றமை, தாக்கப்படுகின்றமை போன்ற செயற்பாடுகள்
ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், தொடர்ந்து ஊடகப் பணியை
மேற்கொள்வதில் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான நெருக்கடிகள் மிகுந்த கவலையினை
ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் நாட்டின் ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews