யாழ். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம்!

278588884 450849103461463 9026517970040299018 n

யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்த விதிகளை மீறி நாளைய தினம் புதன்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள 1650 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ். மாவட்ட செயலக பணியாளர்கள் 400 பேர் உள்ளிட்ட யாழில் உள்ள திணைக்களங்களில் பணியாற்றும் 1000 பணியாளர்களுக்கு, அவர்களின் அலுவலகங்களில் வைத்து விநியோகிக்கப்படவுள்ளது.

மிகுதி 650 சிலிண்டர்கள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பங்கீட்டு அட்டை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்கள் பங்கீட்டு அட்டைக்கே பகிர்ந்தளிக்கும் நடைமுறையுள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் தேவையானர்வர்கள் தமது கிராம சேவையாளர் ஊடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவர்களில் “உ: அட்டை (உத்தியோகஸ்த குடுப்பம்) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. ஏனையவர்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது.

அத்துடன் கிராம சேவையாளர்களிடம் பதிவினை மேற்கொண்ட சமூர்த்தி , வேறு உதவி திட்டங்கள் பெறுபவர்கள் உள்ளிட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு சிலிண்டர் விநியோகிக்க கிராம சேவையாளர் பரிந்துரைக்கவில்லை. அவர்களில் பலர் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியவில்லை.

அதேவேளை கிராம சேவையாளர்களிடம் பதிவினை மேற்கொண்டு , கிராம சேவையாளரின் பரிந்துரையில் ,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பில் குடும்ப அட்டையில் பதிவுகளை மேற்கொண்டு சிலிண்டரை முதல் கட்டமாக பெற்ற பலர் இரண்டாம் கட்ட சிலிண்டர்களை பெற முடியவில்லை.

ஏனெனில் கிராம சேவையாளர் பிரிவில் பதிவினை மேற்கொண்டவர்களில் கிராம சேவையாளரால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் கட்டம் கட்டமாக சிலிண்டர் வழங்கப்பட்ட பின்னரே ,முதலில் பெற்றவர்களுக்கு சிலிண்டர்கள் பெற முடியும்.

இவ்வாறான நிலையில் யாழில் பலர் முதலில் பெற்ற சிலிண்டர் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் பெற காத்திருக்கும் நிலையில் , யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள சிலிண்டர்களில் 1650 சிலிண்டர்களில் 400 சிலிண்டர்களை மாவட்ட செயலக பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ளமை மட்டும் அன்றி மேலும் 600 சிலிண்டர்களை யாழில் உள்ள ஏனைய 20 திணைக்களங்களும் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்டு சிலிண்டருக்காக பலர் காத்திருக்கும் போது தன்னிச்சையாக யாழ்.மாவட்ட செயலகம் உள்ளிட்ட 21 திணைக்கள பணியாளர்களுக்கு என 1000 சிலிண்டர்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் சில திணைக்களங்கள் , பிரதேச செயலங்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகிக்காது தமது அலுவலகங்களுக்கு விநியோக வாகனத்தில் சிலிண்டர்களை வரவழைத்து தமது பணியாளர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version