எல்லை தாண்டிய மீன்பிடி: 23 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 21 வரை நீடிப்பு!

1721753565 INDIA LARGEE

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடித்த போது, கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினரால் இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று (07) காலை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களான இந்திய மீனவர்கள் 23 பேரையும் மேலும் 14 நாட்களுக்கு (ஜனவரி 21 வரை) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்து வரும் நிலையில், இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

Exit mobile version