பகடிவதையில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

University of Jaffna 1

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களை பகடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும், விஞ்ஞான பீடத்தைத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகடிவதைக்கு எதிரான தண்டனை சாசனத்தின் படி, குற்றங்களின் தனமைக்கேற்ப விசாரணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக் காலத்தை மாணவர் ஒழுக்காற்றுச் சபை சிபார்சு செய்தது. அந்த சிபார்சுகளுக்கமைய பேரவையினால் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரவையின் தண்டனை குறித்த அறிவிப்பு அந்தந்த பீடாதிபதிகளின் ஊடாக துணைவேந்தரால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள்ளும் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை- கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

Exit mobile version