பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கருத்து சர்ச்சைக்குரியது. அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்தாலும் அரசமைப்பை இஷ்டப்படி வியாக்கியானம் செய்யக் கூடாது; செய்ய முடியாது.
மாவட்ட ரீதியில் தேர்தலில் நேரடியாகத் தேர்வாகாதவர் மக்கள் பிரதிநிதியாக வர முடியாது என்றால் அது இலங்கையின் அரசமைப்பிலோ அல்லது தேர்தல் சட்டங்களிலோ எழுதி இருக்க வேண்டும்.
தேர்தலையே சந்திக்காதவர்கள் – பல சமயங்களில் வெறுமனே தேசியப்பட்டியலில் பெயர் மட்டும் உள்ளவர்கள் – சிலசமயங்களில் அதிலும் கூட பெயர் இல்லாதவர்கள் எம்.பியாக நாடாளுமன்றத்துக்கு வரச் சட்டம் இடம் அளித்து இருக்கின்றது; மக்கள் ஆணையைப் பெற்றவர்களாக நாடாளுமன்றத்தில் காரியமாற்ற வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஏன் 2010 முதல் 2015 வரை அத்தகைய முறையில் மக்கள் ஆணை பெற்றவராகவே சுமந்திரனும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உச்சமாகச் செயற்பட்டார். சர்வதேச ரீதியிலும் காரியங்கள் ஆற்றினார்.
தேர்தல் முடிவுகளைப் பலவிதமான கோணங்களில் – கோலங்களில் பார்க்கலாம்; விமர்சிக்கலாம். தமக்கு வசதியான முறையில் மட்டும் பார்க்கின்றார் சுமந்திரன்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆக 3 இலட்சத்து 27 ஆயிரத்து 165 வாக்குகளை மட்டும் பெற்ற அவரது தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஆசனங்கள் பத்து. விழுந்த வாக்குகளின் வீதாசாரம் தேசிய அடிப்படையில் 2.82 வீதம். ஆனால், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழுந்த வாக்குகள் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகள். 2.15 வீதம்.
தேசிய ரீதியில் இரண்டரை இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சியின் சார்பில் அதன் தலைவர் எம்.பியாக இருப்பது மக்கள் ஆணை அல்ல என்று விமர்சித்தால், ஆக மூன்றேகால் இலட்சம் வாக்குகளுடன் பத்து உறுப்பினர்களுக்கான இடத்தை எப்படி நியாயமான மக்கள் ஆணை என்று கூற முடியும்?
எப்படி ரணிலின் தெரிவு மக்கள் ஆணை அல்ல என்ற சுமந்திரனின் கருத்துத் தவறானதோ அதே போன்றதுதான் தமிழரசின் 10 பிரதிநிதித்துவ ஆணையையும் பொருத்தமற்றது என்ற நமது வாதமும் கூடத் தவறானதுதான்.
ஆனால், இப்படி எல்லாம் விரும்பியபடி திசைதிருப்பல் வாதங்களை வைக்கக்கூடாது, வைக்க முடியாது என்பதற்காக இக்கருத்தை நாமும் முன்வைத்தோம்.
69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாம் வழங்கிய அந்த ஆணையை மக்கள் திரும்பப் பெற்றுவிட்டார்கள், அதனால்தான் அவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகிறார்கள் என்ற எங்களதும் சுமந்திரனினதும் வாதம் நியாயமானது என்றால் – உடனடிப் பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லாத சூழலில் – தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, நாடு மீளுவதற்கு ஸ்திரமான தலைமையும், தகுந்த வழிகாட்டலும், தேர்ந்த அனுபவமும், திறமையும் மிக்க ஓர் அரசுத் தலைவர் தேவை என்று கருதும் பொதுமக்கள், ரணிலுக்குத் தாம் வழங்கிய உள்ள ஆணையை மேலும் வலுப்படுத்தஇருக்கிறார்கள் என்று நாம் ஏன் கருதக்கூடாது?
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பஸில் வேட்பாளர் பட்டியலில் கூட பெயர் இல்லாத நிலையில் நிதி அமைச்சரானபோது அதைச் சட்ட சவாலுக்கு உட்படுத்தத் தவறி விட்டு, இப்போது ரணிலுக்கு எதிராக விதண்டாவாதம் செய்வது இளகிய இரும்பைக் கண்டு தூக்கித்தூக்கிக் குத்துவதற்கு ஒப்பானதாகும்.
முன்னர் சாணக்கியனுக்குக் குறிப்பிட்ட அதே கருத்துத்தான் இந்த விடயத்திலும். It’s too much. ரணிலுக்கு எதிரான இந்த விமர்சனம், அளவுக்கு அதிகம்.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (13.05.2022 – மாலைப் பதிப்பு)
Leave a comment