புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு, எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர் இறங்கியுள்ளனர். புதிய பிரமரின்கீழ்தான் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,
“ புதிய பிரதமரின்கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.
மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் நாளை (30) கொழும்புக்கு வருகின்றனர். இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.
” மகாசங்கத்தினரின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின்கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சி தலைவர்களுக்கு மகா சங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள்.” – என்று ஓமல்பே சோபித தேரர் இன்று அறிவித்தார்.
#SriLankaNews