நாட்டில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று!

01 HIV AIDS

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேற்குறிப்பிட்ட வயது எல்லைக்குட்பட்டோரில் 25 பேர் மாத்திரமே கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், நாட்டில் எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த வருடத்தின் முதலாவது அரையாண்டுக்குள் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும்
இந்த வருடம் 342 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாடசாலைகளில் பால்நிலை கல்வியை உரிய முறையில் பெற்றுக் கொடுக்காமையே இவ்வாறான தொற்று நோய்கள் அதிகம் பரவுவதற்கு காரணம் என்றார்.

தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் நபர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது என்று தெரிவித்த அவர், போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இளைஞர்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாவதாக சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version