இரட்டிப்பு பெறுமதியில் திரவ உரம் இறக்குமதி மூலம் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்கும் தற்காலிக ஏற்பாடுகளில் ஒன்றாக திரவ உரம் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் நிறுவனம் ஒன்றில் இருந்து கேள்வி கோரல் இன்றி குறித்த திரவ உரம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
வெறும் ஐந்து அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட திரவ உர போத்தல் ஒன்றுக்கு முதற்கட்டத்தில் 12. 5 டொலர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 10 டொலர் வீதம் அரசாங்க நிதி செலவிடப்பட்டிருந்தது.
அதன் மூலம் உண்மையான சந்தைப் பெறுமதியை விட இரட்டிப்பு விலையில் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அரசாங்கத்தின் நிதியில் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் கமத் தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.