கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல இந்து ஆலய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன. குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணாமல் போன விக்கிரகங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணுவ மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த இந்து ஆலயங்களில் இருந்து திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட பல விக்கிரகங்கள் கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த விக்கிரகங்கள் திருட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்கள் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதோடு, குறித்த நபர்களின் தொலைபேசிகளில் காணாமல் போயுள்ள விக்கிரகங்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் காணாமல் போயுள்ள 2 விக்கிரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment