சஜித்தை நான் நேசிக்கின்றேன், நாட்டுக்காகவே என்னை பலிகடாவாக்கினேன் – புலம்பும் ஹரின்

Harin Fernando

” நான் அமைச்சராக பதவியேற்றிருக்காவிட்டால், சர்வக்கட்சி அரசு அமைந்திருக்காது. நாட்டுக்காகவே என்னை நானே பலிகடாவாக்கிக்கொண்டேன்.”

இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சஜித் பிரேமதாசவை இன்னமும் நேசிக்கின்றேன், அவரை எனது அண்ணனாகவே உணர்கிறேன். எனக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது, அருகில் துணையாக இருந்தார். ஆறுதல் கூறினார். ஊக்கமளித்தார். குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பில் இருந்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு பல தடவைகள் சஜித்திடம் கோரிக்கை விடுத்தேன். கெஞ்சினேன், அடம்பிடித்தேன், சண்டையிட்டேன். ஆனால் இந்த விடயத்தில் தம்பியை, அண்ணன் நம்பவில்லை.

நான் வெளியேறுவதற்கு, இரு நாட்களுக்கு முன்னர், சஜித்தை சந்தித்தேன். ” என் கண்களை பார், என்மீது நம்பிக்கை இல்லையா..” என அவர் கேட்டார்.

” நம்பிக்கை என்பது பிரச்சினை அல்ல. நாட்டில் பிரச்சினை உள்ளது. அந்த சவாலை ஏற்காவிட்டால் நாம் சாபத்துக்கு உள்ளாவோம்.” எனக் கூறினேன்.

ரணில் எனது அரசியல் குரு. நான் அமைச்சு பதவியை ஏற்றிருக்காவிட்டால், ஏனையோர் பதவியை ஏற்றிருக்கமாட்டார்கள். ஏனெனில் மக்கள் விமர்சிப்பார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் என்னை நான், அரசியல் ரீதியில் பலிகடாவாக்கிக்கொண்டேன்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version