எம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை! – சுமந்திரனுக்கு செந்தில் பதிலடி

WhatsApp Image 2022 05 03 at 9.33.11 AM

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் கேட்க வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து, ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட தற்போதைய அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியமை பெரிய விடயமாக அமையாது.ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார், அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.

அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில், நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன், நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை, நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள். 12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள், அதனை நிறைவேற்ற முடியவில்லை.

சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள், அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version