ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை இல்ல வீதியை இன்று மாலை சுற்றிவளைத்த மக்கள் நள்ளிரவைத் தாண்டியும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பொலிஸாரின் தடையைத் தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டனர்.
இதன்போது கொதிப்படைந்த மக்கள், படையினரை ஏற்றி வந்த பஸ் ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர்.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மேலதிகமாகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவர்களுள் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார்.
இலங்கையை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள் இப்படியான மக்களின் எதிர்ப்பை தமது வீடுகளுக்கு அருகில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment