நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹரக் கட்டாவின்’ சகாவான – ‘கதீரா’ எனப்படும் பிரபோத குமார, பொரலஸ்கமுவவில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய குறித்த நபர், ஹரக் கட்டாவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றத்தை நிறைவேற்றுவதற்காக பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி வெலிகமவில் சுட்டி மாமா என அழைக்கப்படும் நபரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திலும், மே 14 ஆம் திகதி ரொஷான் என்றழைக்கப்படும் ‘ஜக்கா’ காயமடைந்த மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் சந்தேக நபர் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் ஒப்பந்தக் குற்றமாக நடத்தப்பட்டதாகவும், ஹரக் கட்டாவின் வழிகாட்டுதலால் நடத்தப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வகை 8 துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் மற்றும் 17 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் STF கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews