பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்தார்.
“2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கியது. அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தற்போதைய அரசாங்கம் மீள ஆய்வு செய்ய வேண்டும்,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கும் என அறிவிக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக இருந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அரசாங்கம் தனது பேரிடர் முகாமைத்துவ அணுகுமுறையை மேம்படுத்த முந்தைய நிர்வாகத்தின் அனுபவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவின் கருத்தாக உள்ளது.