மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
அவர் சிங்கப்பூர் செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு எதிராக இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. இதனையடுத்து ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து ஜுலை 13 ஆம் திகதி நாட்டிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச்சென்றார் கோட்டாபய ராஜபக்ச. அங்கிருந்து 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்பவே அவர் திட்டமிட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு இலங்கை பயணத்தை அவர் பிற்போட்டுள்ளார். இதற்கமைய அவர் தாய்லாந்து நோக்கி இன்று புறப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்து அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், இராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும்.
#SriLankaNews