கடந்த சில நாட்களாக ஜனாதிபதி தம்பிக்கும் பிரதமர் அண்ணனுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எம்.பிக்களின் டபல் கேமும் இதற்கொரு காரணம். உதாரணத்துக்கு நேற்றுக் (26) காலை அலரி மாளிகையில் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ நேற்று மாலை இடைக்கால அரசு தேவை எனவும், பெரும்பாலான எம்.பிக்களின் ஆதரவு அதற்குள்ளது எனவும் அறிக்கை விடுகின்றார்.
இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இஷ்டப்படுகின்றார் என்பதால் அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும், பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பெடுத்தால் பிரதமர் பதவியைத் தொடர அவருக்கு ஆதரவைத் தெரிவிப்பதும் பொதுஜன முன்னணி எம்.பிக்களுக்கு வாடிக்கையாகி இருக்கின்றது.
இதற்கிடையில் இந்தியாவும் சீனாவும் இலங்கை அரசியலில் புகுந்து விளையாடுகின்றன. ஜனாதிபதி பக்கம் இந்தியா நிற்கின்றது. பிரதமர் பக்கம் சீனா நிற்கின்றது என்று பேசப்படுகின்றது. இதனால் கொழும்பில் இப்போது எம்.பி. ஒருவரின் விலை தலைக்குப் பல கோடிகள் என்ற ரீதியில் பேசப்படுகின்றன. அதுவும் டொலர்களில். கோட்டாவா ,மஹிந்தவா வெல்வார் என்று பேசப்பட்டு இப்போது அது இந்தியாவா, சீனாவா என்று பேசுமளவுக்கு வந்திருக்கின்றது.
இவற்றுக்கெல்லாம் அப்பால், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிடும் எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகம். 113ஐத் தாண்டி வந்தாலும்கூட நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படும் நாளில் அந்த எம்.பிக்கள் நாடாளுமன்றம் வரவில்லையெனில் கதை கந்தல்தான்.
இப்போதைய நிலைவரப்படி விமல், கம்மன்பில அணியின் கைகள் ஓங்கியிருக்கின்றன. அதற்குக் காரணம் பொதுஜன முன்னணியின் எம்.பிக்கள் சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியுள்ளனர்.
விமல் இருக்கும் இடத்துக்கு எவன் போவான்? என்று கேட்பது தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் மட்டுமே. ஆனால், விமல், கம்மன்பிலவின் வாய்வார்த்தைகளை அறிந்த தென்னிலங்கை எம்.பிமார் அவர்களைப் பகைத்து மக்களிடம் சென்றுவிட முடியாது என்றே கருதுவது தெரிகின்றது.
எம்.பிக்களின் ஆதரவைப் பெற நடத்தும் பேச்சுக்களின் போதெல்லாம், “ஊருக்கும் தொகுதிக்கும் எப்படி செல்வீர்கள்? எப்படி மக்களைச் சந்திப்பீர்கள் என்பதை யோசியுங்கள்…” என்று கூறி அச்சத்தை உண்டுபண்ணியே பேச்சை ஆரம்பிக்கின்றது விமல் அணி. இதனால் ஊர்ப்புற எம்.பிக்கள் பலர் விமல், கம்மன்பில பின்னால் திரண்டுள்ளனர்.
இந்த நெருக்கடி சூழலில் முக்கியமான அரச அதிகாரிகள் நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர். அவர்கள் திரும்பி வருவார்களா என்பது தெரியவில்லை. அதுதவிர அரச தலைவர்கள் பக்கத்தில் இருந்த அதிகாரிகள் இப்போது அலுவலகங்களுக்கு வருவதே குறைவு. பலர் அடுத்த நகர்வுகளுக்கு ஆயத்தமாகி செட் ஆகியுள்ளனர்.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட முன்னர் பல மாற்றங்கள் வரும் வாய்ப்பே இருக்கின்றது. இடைக்கால அரசை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மிக உறுதியாக இருக்கிறார். அதில் மாற்றமில்லை.
அப்படி அவர் செய்தால் இடைக்கால அரசு குறித்தான தங்களது கோரிக்கைக்கு மதிப்பளித்தார் என்று கருதி, மகாநாயக்க தேரர்கள் காலிமுகத்திடலுக்கு வரலாம். ஜனாதிபதி வீடு செல்லக்கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி உத்தரவாதமொன்றை ஜனாதிபதி சார்பில் வழங்கலாம். மகாநாயக்க தேரர்களின் பேச்சைத் தட்ட முடியாத நிலைமை போராட்டக்காரர்களுக்கு ஏற்படலாம்.
இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எம்.பிக்கள் பெரும்பான்மையானோர் கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்தால் இடைக்கால அரசை ஏற்படுத்த பச்சைக்கொடி காட்டுவார் கோட்டா.
ஆனால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யமாட்டார் ஜனாதிபதி. ஏனெனில் இடைக்கால அரசின் பிரதமர் ஒருவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தால் மஹிந்தவின் பிரதமர் பதவி வலுவற்றதாகிவிடும்.
இடைக்கால அரசில் சில அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வரவுள்ளன. சில அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார். பாதுகாப்பும் ஊடகமும் ஜனாதிபதியின் கீழ் அல்லது அவர் சொல்பவருக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது” – என்றுள்ளது.
#SriLankaNews