24 6644169f496ac
இலங்கைசெய்திகள்

இரட்டை வேடம் போடும் இலங்கை அரசு: சுமந்திரன்

Share

இரட்டை வேடம் போடும் இலங்கை அரசு: சுமந்திரன்

பாலஸ்தீனத்துக்குக் குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு நயவஞ்சகத்தன்மை மற்றும் இரட்டை வேடத்துடன் செயல்பட்டது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (14) நடைபெற்ற பாலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீனத்தின் இன்றைய நிலைமை மிகவும் பாரதூரமானதுடன், கவலைக்குரியது. இந்த நிலைமையை எவரும் அலட்சியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத்தில் இருதலைப்பட்சமாக நடந்துகொள்பவர்களும் இருக்கின்றார்கள்.

அவர்களின் செயற்பாடு நயவஞ்சகமானவை. மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பில் அவர்கள் பேசுகின்றனர்.

ஒரு நாட்டுக்குள் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டு பாலஸ்தீன நிலைமை குறித்துப் பேசுகின்றனர்.

பாலஸ்தீனத்தில் அதிகளவான மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களும் உள்ளனர். இந்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான மோதலாகும்.

இலங்கையிலும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அதனை உள்விவகாரம் என்றும், சர்வதேச குற்றச் செயல் அல்ல என்றும் கூறியவர்கள் பாலஸ்தீன சம்பவத்தை உள்விவகாரம் என்று கூறுவதில்லை.

மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவுகூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது.

போர் வலயத்துக்குள் 4 இலட்சம் மக்கள் சிக்கியிருந்தனர். அவர்கள் உண்ண உணவின்றி உப்பில்லா கஞ்சியையே அருந்தினார்கள்.

இதனை நினைவுகூரும் வகையில் அங்கு கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமாகும். இலங்கையில் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் இழப்புகளை நினைவுகூரும் நாளாகவே இதனைப் பார்க்கின்றோம்.

எமது மக்கள் இறுதிக்கட்ட போர்க் காலத்தில் கஞ்சியைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள். இதனை நினைவுகூர இடமளிக்காமை தமிழர்களின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது.

இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையைப் பார்த்தோம். பெண் ஒருவர், இரு ஆண் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கஞ்சியைப் பரிமாறியமைக்காகவே அவரை இழுத்துச் செல்கின்றனர். கஞ்சி விவகாரத்தில் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் இறக்கும் மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால், இங்கே இறந்தவர்கள் தொடர்பில் நிலைப்பாடு என்ன என்று கேட்கின்றோம்.

இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? பாலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா? என்று கேட்கின்றேன்.

பாலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேசத் தலையீடு அவசியம் என்றும் கூறும் நீங்கள் ஏன் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும்போது உள்ளக விவகாரம் என்று கூறுகின்றீர்கள்.

இது இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. யுத்தம் என்பது சுத்தமானதாக இருக்க முடியாது.

ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமாகும். ஆனால், இங்கே உள்ளக விசாரணை தொடர்பில் கூறிக்கொண்டு ஒரு தரப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிகின்றோம். ஆனால், அதே மனச்சாட்சியுடன் இங்கு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், உள்ளகப் பொறிமுறை என்று கூறிக்கொண்டு ஏன் இவ்வாறு நயவஞ்சகமாகச் செயற்படுகின்றீர்கள் என்று கேட்கின்றேன்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...