உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்: அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கும் விசேட அனுமதி!

Tumbnail eduwire 113

‘டித்வா’ புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் நாடு முழுவதும் மீண்டும் நடைபெறவுள்ளன.

நாளை ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இடம்பெறும்.

நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் தேர்வுகள் நடைபெறும். இதற்காக 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் 32 பிரதேச மத்திய நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.

முன்னைய கால அட்டவணையில் குறிப்பிடப்பட்ட அதே நேரங்களிலேயே பரீட்சைகள் நடைபெறும். எனினும், மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை காரணமாகத் தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு போன்றவற்றைத் தொலைத்த பரீட்சார்த்திகள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தற்காலிக அடையாள ஆவணத்தைச் சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version