நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் மூவரும் ஒபநாயக்க மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அவர்களுக்குப் பண உதவி வழங்குமாறு கோரி, பொதுமக்களை ஏமாற்றி, வங்கி கணக்கிற்குப் பணம் பெற்று மோசடி செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.