24 6642d6d544bff
அரசியல்இலங்கைசெய்திகள்

நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன்

Share

நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன்

வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதனைச் சொன்னாலும் அதனை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற நிதிக் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அதற்கான நீதியைக் கோரும் விதமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கின்றனர்.

அந்த இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்திய கோட்டாபய ராஜபக்சவும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளியபோது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர்பிழைத்த வரலாறு உள்ளது.

இதனை நினைவுகூரும் விதமாக மக்களுக்குக் கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஆலயமொன்றில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவிச்செயலாளர் ஹரிஹரகுமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது தான் இந்த நாட்டின் நல்லிணக்கம், மற்றைய இனங்களை, மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதனைச் சொன்னாலும் அதனை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், பொதுமக்களை ஒன்றுகூட்டுவதும் அவர்களுக்கு உணவு, கஞ்சி பரிமாறுவதும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக் கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ‘தன்சல்’ உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதாரச் சீர்கேட்டைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களைக் கோருவார்களா?அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா?

தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? இந்த இனவாதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பொலிஸாரின் அத்துமீறல்கள் எல்லை தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றன.

கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே இரண்டு பொலிஸார், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துரத்திச் சென்று உதைந்து வீழ்த்தியமையால் அவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்திருக்கின்றார். இந்த இரு பொலிஸாரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். பொலிஸாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...