ஐ.ஓ.சி நிறுவனத்தினால் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் ! – யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவிப்பு

IMG 20220629 WA0078

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையினருக்கும், பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேலதிக அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐ.ஓ.சி விற்பனை நிலையத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே இராணுவத்தினரால் வழங்கப்பட்ட டோக்கன் முறைக்கேற்ப டோக்கனை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக தற்போது பத்தாம் திகதி வரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் அதற்கு மேலதிகமாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் அவர்களுக்கும் எரிபொருள் வழங்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைக்கேற்ப எரிபொருள் வழங்குமாறு கூறியிருந்தார்கள். அதற்கேற்ப ஐஓசி நிறுவனத்தின் மூலம் ஓரிடத்திலே வைத்து பொதுமக்களுக்கும் மற்றொரு இடத்தில் வைத்து அத்தியாவசிய சேவை உத்தியோகத்தினர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து இதே நடைமுறையில் அத்தியாவசிய சேவையினருக்கும் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகிப்போம்.

குறிப்பாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகளை மேற்கொண்டு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version