இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை!! – மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரிப்பதாக சுட்டிக்காட்டு

image b86728cb77

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, திங்கட்கிழமை (19) தெரிவித்தது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே 2022ஆம் ஆண்டில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கையில், நான்கு பேரில் ஒருவர் ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பால் நிலைமை மோசமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி கீழ்நோக்கிய போக்கில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் விலங்குணவு கிடைக்காமலும் மீனவர்கள் எரிபொருளை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இதன் காரணமாக, உள்ளூர் சந்தைகளில் உணவு விநியோகம் சுருங்கி வருவதாகவும் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவிகள் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 244,300 பேரை சென்றடைந்துள்ளதாகவும் 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்காக திங்கட்கிழமை (19) வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version