துமிந்த மீண்டும் கைது!

dumunda

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்திருந்தது.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உடன் கைதுசெய்து, மீண்டும் மரணதண்டனைக் கைதியாகச் சிறையில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், துமிந்த சில்வா திடீர் நோய்வாய்ப்பட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மாலை அங்கு சென்ற சி.ஐ.டியினர் அவரைக் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை மோசமானதாக இல்லாவிட்டால் அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version