இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி 4.5 பில்லியன் ரூபாய்க்கும் (450 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
படகுகளில் இருந்து சுமார் 285 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் (ஐஸ் மற்றும் ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படுகிறது) மீட்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சோதனை: திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இன்று (25) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க முப்படைகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன எனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பாகப் படகில் இருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.