“ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற்துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும்” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று (2023.05.08) கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற சீநோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் இணையத்தள வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
” எமது நாடு ஒரு புதிய மாற்றத்திற்கு உள்ளாகி, மீன்பிடித் தொழிற்துறை எதிர்காலத்திற்கு பயனளிக்கும் ஒரு புதிய வேலைத்திட்டத்தில் பிரவேசிக்கும் தருணமாக இந்த ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை நோக்குவோம். எந்த ஒரு நிறுவனமும், அது அரசாங்க நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியாராக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு திட்டமும், குறிக்கோளும் இருக்க வேண்டும். அத்தகைய திட்டம் மற்றும் இலக்கு இல்லாமல் ஒரு அமைப்பு முன்னேற முடியாது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை நிறுவனங்களையும் நாட்டையும் பாதிக்கிறது. எனவே, சீனோர் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை இன்று முன்வைப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல் பாதையில் இலங்கை அமைந்துள்ளது. இது இந்த கடல் மார்க்கத்தின் ஊடாக பயணிக்கும் கப்பல்களைப் பற்றியது மட்டுமல்ல. பெறுமதியான மீன்வளம் மற்றும் அதற்குத் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பிலும் முன்னோக்கிய திட்டம் தேவை. இந்தத் திட்டங்கள்தான் எமது நாட்டின் எதிர்காலம்.
நாம் சுமார் இருநூறு ஆண்டுகளாக தேயிலை மற்றும் இரப்பர் ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும், எதிர்காலத்தில் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். சீனோர் நிறுவனம் உருவாக்கப்பட்ட பின்னர், மீன்பிடித் தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பைபர் கிளாஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எமது மீன்பிடி தொழிலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த திட்டத்தில் சுற்றுலாத் துறையில் பிரவேசிக்கக்கூடிய பல்வேறு புதிய படகுகள் தயாரிப்பதற்கான பல புதிய நடவடிக்கைகளும் அடங்கும்.
இலங்கைக் கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் சுவை அதிகம் என்று கூறும் ஐரோப்பா, ஜப்பான் நாடுகளின் தேவையை இன்றும் எம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த கோரிக்கையை நிறைவேற்ற புதிய செயற் திட்டம் அடித்தளம் அமைக்கிறது. மீன்களை பாதுகாப்பாக சேமிப்பதில் சிக்கல் உள்ளது. அதற்கான புதிய திட்டத்தில் உலக உணவு நிறுவனம் இறங்கியுள்ளது. பைபர் கிளாஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீன்களைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்படக்கூடிய துறைகளில் பிரவேசித்து சவாலை வெற்றிகொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும். கடலில் பயணிக்கும் ஒவ்வொரு மீன்பிடிக் கப்பலுக்கும் சமிக்ஞை முறைமையை நிறுவுவதற்குத் தேவையான இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்திலும் நாம் ஈடுபட்டோம்.
எமது கடற் பிராந்தியங்களைக் கடந்து, புதிய தலைமுறையினருக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்துவது அவசியம். புதிய நடவடிக்கையாக, சீனோர் நிறுவனத்தை தொழில்நுட்ப நிறுவனமாக மாற்ற அரசு முழுமையான ஆதரவை வழங்கும். ” – என்றார்.
இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“கடற்றொழில் துறையின் முன்னேற்றத்திற்கு சீநோர் நிறுவனம் பெரிதும் பங்களிக்கிறது. நன்னீர் வளத்தின் மூலம் மக்களுக்கு போசனையை மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் பங்களிக்க முடியும். இதற்கு புதிய தொழில்நுட்ப படகுகளை பயன்படுத்த வேண்டும். சீனோர் நிறுவனம் அதற்கும் பங்களிக்கிறது. தொலைதூரம் சென்று பல வாரங்களாக படகுகள் மூலம் மீன்பிடித்தல் நடைபெறுகிறது. இந்த மீன்களின் தரம் மற்றும் பாதுகாப்புக்கு, குளிரூட்டல் வசதி கொண்ட படகுகள் அவசியம். இதற்கு சீநோர் நிறுவனத்தின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” – என்றார்.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த,
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இதற்கான ஆரம்பப் புள்ளியாக இந்த ஆண்டுவிழா அமைந்துள்ளது. இந்த நிறுவனம் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தனவின் காலத்தில் நிறுவப்பட்டது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழிலின் பொற்காலத்தை உருவாக்கினார்.
இந்த நிறுவனத்தை ஒரு சிறந்த மற்றும் வலுவான நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. இதுவரை நாட்டைச் சூழவுள்ள கடல் வளத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டோமா இல்லையா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. இது வெறும் ஐந்தாண்டு செயல் திட்டம் அல்ல. இந்தத் துறையில் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். ஏனெனில், நாம் சர்வதேசத்தை வெல்ல வேண்டும். அனுபவங்களைப் பெற வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலமும் இலக்குகளை நிறைவு செய்வதன் மூலமும் தான் நாம் அதைச் செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.
#SriLankaNews