ஐந்தாவது நாள் ஊர்திப் பவனி கொக்குவிலிருந்து ஆரம்பம்!

download 3 1 5
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனிக்கு ஐந்தாவது நாள் கொக்குவில் பகுதியில் இருந்து ஆரம்பம்
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.

இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து   தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று  மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம்  ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

இந்நிலையில் ஊர்தியின் ஐந்தாவது நாள் பயணம் இன்று காலை கொக்குவில் பகுதியில் ஆரம்பமானது அதனை தொடர்ந்து மருதனார்மடம் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக  நிறுத்தப்பட்டது அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்

அதனை தொடந்து குறித்த ஊர்தி 1995 ம் ஆண்டு இலங்கை அரசின் விமான குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக அதிகளவான உறவுகள் கொல்லப்பட்ட நவாலி சென்பீற்றேஸ் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தி தற்போது யாழ்ப்பாணம் நகரை நோக்கி செல்கிறது

இதேவேளை குறித்த ஊர்திப்பவனியை புலனாய்வாளர்கள் சிலர் பின்தொடர்ந்து வருவதோடு ஊர்தி செல்லும் இடங்களில் அதிகளவான புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து கண்காணித்து வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது .
#srilankaNews
Exit mobile version