நில மதிப்பீட்டாளர்கள் தட்டுப்பாட்டால் அரசுத் திட்டங்கள் முடக்கம்! – தனியார் துறையினரை ஈடுபடுத்த COPF பரிந்துரை!

202511084134f92b700d450182df021d71a5d46e ChkhgeE000003 20251108 CBMFN0A001

(251107) -- COLOMBO, Nov. 7, 2025 (Xinhua) -- Sri Lankan President and Finance Minister Anura Kumara Dissanayake (L) delivers a speech on the country's 2026 budget in Colombo, Sri Lanka, Nov. 7, 2025. Sri Lanka has announced a series of measures to strengthen digitalization and modernization of public administration under the 2026 national budget presented in Parliament on Friday. (Photo by Ajith Perera/Xinhua)

இலங்கையில் தகுதியான நில மதிப்பீட்டாளர்கள் இல்லாத காரணத்தால், பாரிய அளவிலான அரசாங்கத் திட்டங்கள் மற்றும் சொத்து மதிப்பீட்டுப் பணிகள் கடும் தேக்கநிலையைச் சந்தித்துள்ளன. இது குறித்து நாடாளுமன்றப் பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. தற்போதைய நிலையில், பெரும்பாலான தகுதியான மதிப்பீட்டாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதே (Brain Drain) இந்தத் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியக் காரணம் என்று துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க, தகுதியான தனியார் துறை நில மதிப்பீட்டாளர்களையும் அரசுத் திட்டங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொது நிதிக் குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. “அரசுத் துறை மதிப்பீடுகளில் தனியார் துறையினருக்கு வாய்ப்பளிப்பது காலத்தின் கட்டாயம். இதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் விரைவில் மாற்றியமைக்க வேண்டும்” என்று ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ள நஷ்டஈடு வழங்கும் பணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மதிப்பீட்டுத் திணைக்களத்தில் (Valuation Department) பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நகர அபிவிருத்தி அதிகார சபையில் (UDA) பணியாற்றுபவர்களுக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டி, நில மதிப்பீட்டுப் பணிகளில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதை மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகள் எதிர்த்து வருகின்றனர். இத்தகைய உள்ளக மோதல்கள் காரணமாகப் பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் காலதாமதமாகி வருகின்றன.

நில மதிப்பீட்டாளர்களின் கல்வித் தகுதி மற்றும் தரச் சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சிக்கல்களையும் தீர்க்க அரசு உறுதியளித்துள்ளது. நில மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டால் மட்டுமே ரியல் எஸ்டேட் சந்தை சீரடைவதுடன், வங்கிக் கடன்களுக்கான சொத்து பிணைகளை உறுதிப்படுத்துவதிலும் நிலவும் சிக்கல்களைக் களைய முடியும். எனவே, தனியார் துறையினரை உள்வாங்குவது தொடர்பான புதிய கொள்கை அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version