கொழும்பில் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் பல பகுதிகளில் பேருந்துகளில் பயணிப்பவர்களை குறி வைத்து கையடக்க தொலைபேசிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் திருடப்படுவதனால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பல பகுதிகளில் திருடப்பட்ட 43 கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் படோவிட்ட மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் டி மெல்வத்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து பொருட்களை திருடுவது மற்றும் பகலில் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் கைத்தொலைபேசிகளை திருடிய ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவிசாவளை, ஹங்வெல்ல, கிரிபத்கொட, மிரிஹான, நீர்கொழும்பு, பியகம, புஸ்ஸல்லாவ மற்றும் கிருலப்பனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 11 திருட்டுச் சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த நபரால் திருடப்பட்ட பொருட்களில் 04 மடிக்கணினிகள், 29 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 03 டேப் கணனிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் மற்றும் சொத்துக்கள் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, படோவிட்ட பிரதேசத்தில் பல பொருட்கள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை திருடுவதில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள், தங்க மோதிரம், மற்றும் நெக்லஸ் போன்றவற்றை மீட்டுள்ளார். 37 வயதான சந்தேக நபர் பொல்கசோவிட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment